இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வயது நிறைவடைந்து 81வது வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா கொண்டாடினார். காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா வீட்டுக்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து புத்தகம் பரிசளித்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி ஆகியோரும் சென்றிருந்தனர். அதைத்தொடர்ந்து திரைத்துறையினர் ஏராளமானோர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இளையராஜா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!
அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை ‘இசைஞானி’ எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.
இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.
எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்!
வாழ்க நூறாண்டுகள் கடந்து!
-மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர்…