சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். அதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதாகவும், ரத்து செய்த உதவித் தொகையை தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு 2008-2009ம் ஆண்டில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை (மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால் 2022-2023ம் ஆண்டுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படாது, ரத்து செய்யப்படுகிறது, இந்த திட்டத்தின்கீழ் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியே பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.