நாகை மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சிக்கல் கீழ்வேளூர் கீழையூர் பாலையூர், திருப்பூண்டி திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் வயல்களில் மூழ்கின. தொடர்ந்து பத்து தினங்களுக்கு மேலாக பெய்து வந்த மழையால், வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க முடியாமல், விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க
துவங்கியுள்ளதால், அங்கு வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிகால்களில் வடிய வைக்கும் பணியில் கடைமடை விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வயல்களில் தேங்கியிருந்த மழை நீரானது மெல்ல மெல்ல வடிகால் வழியாக வடிய தொடங்கியுள்ளது. இதனிடையே மழைக்கு முன்னர் பயிர்களுக்கு இடப்பட்ட உரமானது மழையில் கரைந்து வீணானதால், தற்போது பயிர்களுக்கு இரண்டாவது முறையாக செலவு செய்து உரம் மற்றும் பூச்சி மருந்து தெளிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.