திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக திருச்சி மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி ஜங்சன் ரயில் நிலைய சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் என 50க்கும் மேற்பட்ட ரயில்கள் திருச்சி ஜங்ஷன் வழியாக செல்வது வழக்கம். இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேசனிற்கு வந்து போகின்றனர். தற்போது ரயில் நிலைய சுரங்கப்பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பயணிகள் நடந்து செல்வதற்கும் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த இரு தினங்களாக தேங்கியுள்ளதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பயணிகள் கருதுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள நீரை அகற்றும் நடவடிக்கையை ஈடுபட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.