திருச்சி, உயக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் பியூனாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கோவிலுக்கு வெளியே யாசகம் பெற்று கோவிலின் வெள்ளை கோபுரம் அருகே தங்கி இருந்துள்ளார். அதே பகுதியில் ஈரோடை சேர்ந்த முருகேசன் என்பவரும் தங்கி யாசகம் பெற்று வந்துள்ளார்.
கந்தசாமியும் முருகேசனும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் தனக்கு அருகே கந்தசாமி படுக்கக் கூடாது என முருகேசன் கந்தசாமியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவருக்கும் தகராறு முற்றியதில் கந்தசாமி தலையில் கல்லை போட்டு முருகேசன் கொலை செய்துள்ளார். இந்த வழக்கை ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு முருகேசனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் திருச்சி நீதிமன்ற நீதிபதி செல்வ முத்துக்குமாரி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் கந்தசாமியை கொலை செய்த முருகேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.