நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள் கங்கையில் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக நதி கருமை நிறம் அடைந்ததாகவும் கங்கை தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தித்தபோது நீ மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள் என கங்கைக்கு சிவபெருமான் வரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி புண்ணிய நதிகளான யமுனா, சரஸ்வதி, கங்கையுடன் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடி தமது பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். ஐப்பசி 30 நாட்களும் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். இன்று ஐப்பசி மாதம் தொடங்கியது. இம்மாதம் முப்பது நாட்களும் காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீராடி பக்தர்கள் தமது பாவங்களை போக்கிக் கொள்வர். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாதம் (துலாமாதம்) பிறப்பை முன்னிட்டு காவிரி நதியில் இருந்து தங்க குடத்தில் ஸ்ரீ நம்பெருமாளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது. காவிரி நீரால் இன்று பெருமாள் மற்றும் அனைத்து சன்னிதிகளிலும் அபிஷேகம் நடைபெறும்.