திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிந்த வெளி மாநில பக்தர் ஒருவரை கோயிலில் உள்ள அறநிலைத்துறை காவலர்கள் தாக்கியதற்கு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், மாநில முதன்மைச் செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அன்பை புகட்டுவதற்கு நமது முன்னோர்கள் ஆன்மீக கோயில்களை உருவாக்கியுள்ளார்கள். தற்சமயம் கோயில்களில் பக்தர்கள் தாக்கப்படுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். தவறு செய்பவர்களை கண்ணியமாக காவல் துறையில் ஒப்படைப்பது சிறந்த செயலாகும். அதை விட்டுவிட்டு சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு கோயில்களுக்கு வரும் பக்தர்களை தாக்குவது என்பது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு தாக்கியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.