பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த ஜன. 2ம் தேதி நடந்தது.
இந்நிலையில் ராப்பத்து விழாவின் 9ம் நாளான இன்று மதியம் நம்பெருமாள் சவுரிக்கொண்டை சாற்றி, அதில் சந்திர கலை பதக்கம், நாச்சியார் பதக்கம், நெற்றி சரம் , மார்பில் முத்துங்கி கபாய், பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் பிராட்டி பதக்கம், மகரி, அடுக்கு பதக்கங்கள், தங்கப்பூண் பவள மாலை, 8 வட முத்து சரம், ரத்தின அபய ஹஸ்தம் அணிந்து திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை காலை 11 மணியளவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.