Skip to content
Home » ஸ்ரீரங்கம் ரெங்கநாத கோவிலில் சித்ரா பௌர்ணமி… காவிரி ஆற்றில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ..

ஸ்ரீரங்கம் ரெங்கநாத கோவிலில் சித்ரா பௌர்ணமி… காவிரி ஆற்றில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் கடந்த 25-ந்தேதி மாலை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. வெளிக்கோடை நாட்களில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலை புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து, புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நம்பெருமாள் உள்கோடை திருநாள் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில்

இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு மாலை 6.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு உள்கோடை மண்டபத்திற்கு இரவு 7.45 மணிக்கு சென்றடைந்தார். உள்கோடை மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் கோடை திருவிழா நிறைவு பெற்றது.

சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) கஜேந்திர மோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றடைவார். அங்கு நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *