108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு முகூர்த்த கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஶ்ரீரங்கம் சித்திரை வீதியில் அமைந்துள்ள சித்திரை தேரில் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் யானைகள்
முன்னிலையில் முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சேவை சாதிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.