Skip to content
Home » கோவிந்தா! கோவிந்தா! கோஷங்களுடன்….. ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…

கோவிந்தா! கோவிந்தா! கோஷங்களுடன்….. ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம்  ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில்.

திருச்சி ஸ்ரீரங்கம் , காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது  இக்கோவில் .சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் இந்தியாவிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோவிலாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பெருமாள் கோவிலாகவும் விளங்குகிறது. சோழர், பாண்டியர், சேரர், விஜய நகர பேரரசர்கள் என பல மன்னர்களால் சீர் அமைக்கப்பட்ட பெருமை இந்த கோவிலுக்கு உண்டு.

இந்திய கோவில்களிலேயே மிக உயரமான ராஜ கோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் கோவில் தான். மேலும் வருடம் முழுவதும் திருவிழா நடப்பது, லட்சக்கணக்கான பக்தர்கள் ஓரிடத்தில் ஒன்றுக்கூடுவதும் இக்கோயிலின் சிறப்பாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள், நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

குறிப்பாக  வைகுண்ட ஏகாதசி தினத்தி்ல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு  ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு  விழாக்கள் நடைபெற்றாலும் , சித்திரை மாதத்தில் நடைபெறக்கூடிய தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாத தேரோட்டம் இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவிந்தா கோவிந்தா  முழக்கம்..

இந்த ஆண்டு கடந்த மாதம் 28ம்தேதி கொடியேற்றத்துடன்  சித்திரை் திருவிழா தொடங்கியது. அதன் பின்னர் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து ஏழாம் திருநாளான இம்மாதம் 4ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த

அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். எட்டாம் திருநாளான நேற்று அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் மேஷ லக்கனப்படி அதிகாலை 5.15 மணிக்கு திருதேரில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருதேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. ரெங்கா ரெங்கா என்ற  முழக்கத்துடன் தரிசித்த பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் அருள்பாலித்தார். இந்த தேர் திருவிழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஸ்ரீரங்கம்  சித்திரைத் தேர்த்திருவிழாவை ஒட்டி இன்று  திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!