பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று(திங்கள் ) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜன சேவை நடைபெறுகிறது. 11ம் தேதி தீர்த்தவாரி, 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.