Skip to content
Home » சொர்க்கவாசல் நாளை திறப்பு… etamilnews.com, சூரியன் டிவி நேரடி ஒளிபரப்பு..

சொர்க்கவாசல் நாளை திறப்பு… etamilnews.com, சூரியன் டிவி நேரடி ஒளிபரப்பு..

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது. பகல்பத்து விழாவின் கடைசி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நாளை அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளுவார். அதனைத் தொடர்ந்து காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வருவார். அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார். காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும். திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். நாளை உள்ளூர் விடுமுறை வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை அதிகாலை முதல் etamilnews.com, சூரியன் டிவி ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!