கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சாவுக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளியில் உள்ள பொருட்கள், போலீஸ் வாகனங்கள் தீக்கிரையானது. இந்த வழக்கினை சிறப்பு குற்றபுலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று காலை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர் ஆனார். அப்போது செல்வி தனது மகள் ஸ்ரீமதியின் செல்போனை நீதிபதியிடம் ஒப்படைத்தார். ஆனால் நீதிபதி புஷ்பராணி இந்த வழக்கினை சி.பி.சி.ஐ. டி.போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனவே அங்கு ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி செல்வி தனது மகள் ஸ்ரீமதியின் செல்போனை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி.அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியிடம் ஒப்படைத்தார்.