இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா குமாரா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச உள்பட 38 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இதுவரை இலங்கை அதிபா தேர்தலில் இவ்வளவு அதிகமான வேட்பாளர்கள் களத்தில் நின்றது இல்லை. இந்தமுறை அதிக வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் வாக்குப்பதிவில் 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கிறார்கள். இதற்காக நாடு முழுவதும் 13,421 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும்.நமது நாட்டில் வாக்குப்பதிவு செய்தவர்களுக்கு இடது ஆள்காட்டி விரலில் சிறிதளவு மை அடையாளம் இடப்படும்.ஆனால் இலங்கையில் இடது கை சுண்டுவிரலில் அதிக அளவு மை அடையாளம் செய்யப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்றும், நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.