Skip to content
Home » இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Senthil

நாகை மாவட்டம் வேதாரண்யம்   அடுத்த ஆறுக்காட்டுதுறையில்  இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுக்காட்டுத் துறையைச் சார்ந்த பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், ஜானகிராமன், நாகராஜ் ஆகிய 5 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கில்  10 நாட்டிக்கல்  தொலைவில்  இந்திய எல்லைக்குள் வலைகளை விரித்து விட்டு இரவு 7 மணி அளவில் 5 நபர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சார்ந்த பைபர் படகில்  ஐந்து இலங்கை கடற்கொள்ளையர்கள்  வந்தனர். அவர்கள்  ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகின் மீது ஏறி கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களால்  மீனவர்களை கடுமையாக தாக்கினர்.
பின்னர் படகில்  இருந்த ஜிபிஎஸ் கருவி , 20 கிலோ மீன், செல்போன், டார்ச் லைட்,
ஸ்டவ் போன்றவற்றை பறித்துக்கொண்டு வலைகளை  வெட்டி எடுத்துக்கொண்டு  தப்பிச்சென்றனர்.
கடற்கொள்ளையர்கள்  தாக்குதலில் காயமடைந்த அன்பழகன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மற்ற நான்கு மீனவர்களும்  முதலுதவி சிகிச்சை பெற்று வீடு  திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து தமிழக மீனவர்கள் கூறியதாவது: இலங்கை ராணுவம், இலங்கை கடற்கொள்ளையர்கள் என அடுத்தடுத்து புதுப்புது வடிவங்களில் வந்து இலங்கை ராணுவமே இந்த அத்துமீறலில் ஈடுபடுவதாக தெரிகிறது. கடந்த வாரம்  புதுகை மீனவர் படகில் , ராணுவ படகால் மோதி 2 புதுகை மீனவர்களை கொலை செய்யப்பட்டனர்.  3 தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் 22 பேரை இலங்கை பிடித்து சென்றது.

ஆனாலும் மத்திய அரசு இலங்கையை கண்டிக்கவும் இல்லை. இந்தியா வன்மையாக ஒரு கண்டனம் தெரிவித்தால் இலங்கை இப்படி அட்டகாசம் செய்யுமா, தமிழக மீனவர்கள் என்பதால் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. தமிழக மீனவர்களை வேறு நாட்டு ராணுவம் தாக்கும்போது, இந்திய ராணுவம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என தமிழக மீனவர்கள்  வேதனையுடன் கேட்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!