இலங்கை அதிபர் தேர்தலில் சுயேச்சையாக ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் அனுர குமார திசநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உட்பட 38 பேர் போட்டியிட்டனர்.
வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் இலங்கை தேர்தலில், முதல் 3 விருப்பங்கள் அடிப்படையில் 3 வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். மக்களின் முதல் விருப்ப வாக்குகள் முதலில் எண்ணப்படும். இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். ஆனால், இம்முறை அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்டதால் கடும் இழுபறி நிலவியது. அதிகபட்சமாக என்பிபி கட்சியின் திசநாயக 56.3 லட்சம் வாக்குகள் (42.31 சதவீதம்) பெற்றார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா 43.6 லட்சம் வாக்குகளுடன் (32.8%) 2ம் இடம் பெற்றார். ரணில் விக்ரமசிங்கே வெறும் 22.9 லட்சம் வாக்குகள் (17.27%) மட்டுமே பெற்று 3ம் இடத்தை பிடித்தார்.
தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.26 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார். யாருக்கும் 50 சதவீத பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நேற்று மதியம் தொடங்கியது. முதல் சுற்றில் முதல் 2 இடங்களுக்குள் இடம் பெறத் தவறியதால் ரணில் விக்ரமசிங்கே போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் 2 இடங்களை பிடித்த திசநாயக, பிரேமதாசா இருவரில் யாருக்கு 2ம் விருப்ப வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது என 2ம் சுற்று எண்ணிக்கையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் நீண்ட இழுபறிக்குப் பின் திசநாயக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய தலைவர் ரத்நாயக நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திசநாயக இன்று அதிபராக பதவி ஏற்கிறார்.