நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது. நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்து மாலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் இதில், தற்போதைய நிலவரப்படி அனுரா குமார திசநாயகே, 51 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளார். இன்று மதியத்திற்குள் உறுதியான நிலவரம் தெரியும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓட்டு பெற்றால் மட்டுமே, அதிபராக தேர்வு செய்யப்படுவார். வேட்பாளர் எவரும், 50 சதவீதம் ஓட்டு பெறவில்லை எனில், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போதைய நிலவரப்படி தேவையான 50 சதவீதம் ஓட்டுகளை அனுரா பெற்றுவிடும் வாய்ப்புள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகே முன்னிலை 16 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் அனுர குமார திசநாயகே முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் ரணில் சஜித் இருவரும் மிகவும் குறைவான ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர். இலங்கை அதிபர் தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கும் அனுரா குமார திசநாயகே (56), தற்போதைய பார்லிமென்டில் எம்.பி.,யாக இருக்கிறார். இவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி., கட்சியின் தலைவர். 2000 ஆண்டு முதல் எம்.பி.,யாக இருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கா அரசில், வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005ல் சந்திரிகா அரசில் இருந்து பிற ஜே.வி.பி., அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார். 2015 முதல் 2018 வரை, எதிர்க்கட்சிகளின் தலைமை கொறாடா ஆகவும் இருந்தவர். 2019ல் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்தார். அதன் வேட்பாளராக, அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் ஓட்டுக்களே கிடைத்தன என்பது குறிப்பிடதக்கது.