திருச்சி திருவானைக்காவலில் இருந்து காந்தி ரோடு வழியாக ஸ்ரீரங்கம் மேம்பாலம் ஏறும் பகுதியில் கடந்த 10ம் தேதி காலை திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலையின் அடியில் செல்லும் கழிவு நீர் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் அந்த பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்தை தைட செய்து சாலையை சீரமைத்தனர்.
ஏற்கனவே 10ம் தேதி திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் இன்று காலை மீண்டும் அதே போன்று ஒரு பள்ளம் நடுரோட்டில் ஏற்பட்டது. இதனால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து பேருந்துகளும் அம்மா மண்டபம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.இந்த பள்ளம் காலை 7 மணிஅளவில் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்டபோது அந்த பகுதியில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் விபத்துகள் எதுவும் நடக்கவில்லை.
கழிவு நீர் குழாய் உடைப்பு காரணமாக இப்போதும் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உடனடியாக மாநகராட்சி ஊழி்யர்கள் அங்கு வந்தனர். ஜேசிபி மூலம் அந்த பள்ளத்தை தோண்டி சாலையை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் அந்த பணி நிறைவடையும். அதன் பிறகு தான் அந்த சாலையில் போக்குவரத்து நடைபெறும் என தெரிகிறது.