அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த 22-ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்று, வேத பாராயணம் மற்றும் தேவாரம் திருமுறை பதிகங்கள் பாடப்பட்டு, பக்தி சிரத்தையுடன் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை
ஊற்றினர். அப்போது அந்த கூடி இருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். இந்த நிகழ்வில் அனைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.