கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், “தூய்மை இந்தியா” விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸில் உள்ள தாமஸ் பார்க்கில் நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்று, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சிறப்பான செயல்பாடுகளைப் பட்டியலிட்டு பேசினார்.
கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் டாக்டர் ஆர். ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தூய்மையை வலியுறுத்தி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் மனிதச் சங்கிலி, மௌன நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் சென்னை, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லயா, பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) முனைவர் ஆர்.அண்ணாதுரை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணத் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் நன்றி கூறினார்