திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. மக்களவையில் பேசியதாவது…
வழக்கம்போல ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே ரயில்வே திருத்த மசோதா 2024 விசயத்திலும் நடந்துகொள்கிறது.
நாட்டிலுள்ள மற்ற அனைத்து ரயில்வேகளைவிட தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கின்றது. உணவு மற்றும் கழிப்பறை வசதிகளின் தரம்கூட மிக மோசமானதாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும்போது ஒன்றிய அரசு ரயில்வேதுறை தனியார்மயமாக்கலை முன்மொழிகிறது.
இப்படி ரயில்வேதுறையை ஒன்றிய அரசு கைகழுவுவது சரியல்ல. நாட்டின் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் இன்றும் தங்களின் முதன்மை போக்குவரத்தாக ரயில்களையே நம்பி இருக்கின்றனர். அதை கருத்தில்கொண்டு ரயில்வேதுறை தனியார்மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிடவேண்டும்.
மேலும் எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் கூடுதல் ரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்கவேண்டும் உடனடியாக முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தேபாரத் ரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.