தஞ்சாவூர் அருகே திருச்சி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிரீன் சிட்டி பகுதியில் சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த புள்ளிமான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரெட்டிப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையோரம் புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தஞ்சை வனச்சரக அலுவலர் ரஞ்சித் கூறியதாவது: சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரெட்டிப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். இந்த ஆண் புள்ளிமானுக்கு சுமார் 3 முதல் 4 வயது இருக்கலாம். வாகனம் ஏதாவது மோதி இறந்ததா? அல்லது ஏற்கனவே விஷ ஜந்துகள் கடித்து இறந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும். புள்ளிமான்களை பொறுத்தவரை தோப்பு போன்ற பகுதிகளிலும் வசிக்கும் தன்மை கொண்டவை.
தஞ்சை மாவட்டத்திற்கு அருகே புதுக்கோட்டை மாவட்டம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகள் பரந்து விரிந்துள்ள பகுதியாக அன்னவாசல் அருகேயுள்ள நார்த்தாமலை விளங்குகிறது. 700 எக்டேர் பரப்பளவில் உள்ள இந்த பரந்து விரிந்த வனப் பகுதிகள் காப்பு காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இங்கு முயல், நரி, மயில், மான், உடும்பு போன்றவை காணப்படுகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புகள், பண்ணைகள் அதிகம் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள புள்ளிமான்கள் உணவு தேடி தஞ்சை பகுதிக்கும் வந்து விடுகின்றன. இந்த புள்ளிமான் உணவு தேடி இங்கு வந்து இருக்கலாம். ஆனால் இந்த புள்ளிமான் எப்படி இறந்த்து என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனையின் முடிவு இது தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.