திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி புதிய விமான நிலைய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்நிலையில் கூடுதலாக ரூ.249 கோடி செலவு செய்து கட்டுமான பணிகள் ரூ.1200 கோடியில் நிறைவு பெற்றுள்ளது. இந்த புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 4000 சர்வதேச பயணிகள், 1500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.
இந்திய கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் கலை நயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறப்பு விழா வரும் நாளை மறுநாள் (ஜன 2ம் தேதி) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, கலந்துகொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். . மேலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் அன்றைய தினம் நடைபெறுகிறது. இந்த விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு 2ம் தேதி காலை 10 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி வருகிறார். புதிய முனையத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி விவிஐபிக்கள் செல்லும் வழியாக சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு செல்கிறார். அங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில் ரூ.1200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அப்போது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார். விழா முடிந்ததும் மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷா ஆகியோர் வருகை காரணமாக திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலை கழகம் வரை என பாதுகாப்பு பணிகளுக்காக லோக்கல் போலீசார் 8000 பேர் பணியமர்த்த படுகின்றனர். விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சுமார் 100 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) அதிகாரிகள் 30 பேர் திருச்சி வந்துள்ளனர். அவர்கள் விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பிரதமர் வரும் போது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். தற்போது திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரு இடங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் தினத்தன்று 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் விமான நிலையம் அருகே உள்ள வீடுகள், பணியாற்றுபவர்களின் ஒட்டு மொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.