யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” என்றும்,
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றும்,
“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே” என்றும்,
“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம், தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!” என்றும் பாடிய மகாகவி பாரதி
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்” என்றந்தப் பேதை யுரைத்தான் – என்றும் சொன்னார்.
மேற்கண்ட பாடல்களில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் அருமை, பெருமைகளை, சிறப்புகளை பாரதியே தன் கூற்றாக சொன்னாா். ஆனால் மெல்லத் தமிழினிச் சாகும் என்பதை பாரதி சொல்லவில்லை. அப்படி சொன்னவனை பேதை என்று பாரதி சாடினார். ஆனால் அந்த பேதை சொன்னது இப்போது உண்மையாகி விடும்போல தெரிகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் இந்த சம்பவம். அது என்ன என்று பார்ப்போம்.
கரூர் மாவட்டம்,குளித்தலை ஒன்றியம் , வை.புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூபாய் 11.93 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேற்று ரிப்பன் வெட்டி,திறந்து வைத்தார்.
துவக்கி வைத்த அங்கன்வாடி மைய கட்டிடத்திற்குள் குழந்தைகள் கற்பதற்காக வரையப்பட்டு இருந்த தேசியக்கொடி,தேசியத் தலைவர்களின் படங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் கீழ் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் ஏகப்பட்ட பிழைகள் இருந்ததால் கல்வியாளர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மழலைச் செல்வங்கள் கற்றுக் கொள்வதற்காக வரையப்பட்ட படங்களில் இத்தனை பிழைகளா? என்று கேள்வி எழுப்பினர்.
உதாரணத்திற்கு தேசியக்கொடியை வரைந்து அதன் அருகில் தேசிகொடி என்று தவறுதலாக எழுதி உள்ளனர்.
மகாத்மா காந்தி படத்தை வரைந்து….. மகத்ம காந்தி என்றும், கொய்யாப்பழம் படம் வரைந்து அதை கோய்யா பலம் என்றும், வெண்டைக்காய் என்பதற்கு வெட்டககாய் என்றும், தமிழ், ஆங்கில மாதங்கள் அத்தனையும் எழுத்துப்பிழையுடன் எழுதி உள்ளனர்.
இதை வரைந்த ஓவியர் தவறு செய்து விட்டார் எனக்கூறி யாரும் தப்பிக்கக் கூடாது. இதை மேற்பார்வை செய்திருக்க
வேண்டும். இந்த படத்தையும், எழுத்துக்களையும் கொண்டு குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பது பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைப்பது போன்றதாகாதா? இப்படி எழுதினார், அதை குழந்தைகள் படித்தால் தமிழ் எப்படி வாழும்?
இதை திறந்து வைத்த எம்.எல்.ஏ. இதை படித்துபார்த்திருக்க வேண்டும்.அவரும் ரிப்பன் வெட்டவும், குரூப் போட்டோ எடுக்கவும் ஆர்வம் காட்டிவிட்டு போய்விட்டார். உடன் இருந்த அதிகாரிகளோ, அங்கன்வாடி ஊழியர்களோ இதை கண்டுகொள்ளவில்லை. உடனடியாக இதை சரி செய்ய வேண்டும். தமிழ் மொழிய கொல்ல இவர்கள் ஏன் இப்படி கிளம்பி விட்டார்கள் என தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் விழாவில் கலந்து கொண்ட மக்களின் குமுறலாக இருந்தது.