நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது. எனவே திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் ஶ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அதில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. அந்த பகுதி மக்கள் சிலரை மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். அதன் பின்னர் ராணுவம் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டது. இன்று காலை ரயில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னை செல்ல விரும்பிய பயணிகள் அனைவரையும் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மீட்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் முதலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 530 பயணிகள் சென்னை செல்ல விரும்பினர். எனவே அவர்கள் தனி பஸ்கள் மூலம் வாஞ்சி மணியாச்சி அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட உள்ளனர்.