Skip to content
Home » தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று  மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

மாட்டு பொங்கலான இன்று (ஜன.15) பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பிறகு காலை கோவில் வளாகத்தில், உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு என பலவகையான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் மலர்கள் என சுமார் இரண்டாயிரம் கிலோ எடையிலான பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு முன்பாக, 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜைகள் நடந்தது.

விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணைத் தலைவர் மேத்தா மற்றும் கோவில் பணியாளர்கள், ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நந்தியம் பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதுபோல  மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  குத்தாலத்தை அடுத்த வாணாதிராஜபுரத்தில், கோசாலை (பசுக்கள் காப்பகம்) அமைந்துள்ளது. ஆதரவற்று திரியும் மாடுகள், பால் அற்றுப்போய் அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 1008 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது. மாடுகளை குளிப்பாட்டி நெட்டிமாலைகள் அணிவித்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாடுகளுக்கு பழங்கள் கொடுக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று மாடுகளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.