திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற தவாக கட்சித்தலைவர் வேல்முருகன், சமீபகாலமாக திமுகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் சட்டமன்றத்திலும் திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்தவேண்டும்; மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த உச்ச நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனக்கூறியபடி பேச வாய்ப்பு கேட்டு அமைச்சர்கள் இருக்கையை நோக்கி முன்னோக்கி நடந்துவந்து கை நீட்டி பேசிய தவாக உறுப்பினர் வேல்முருகனால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; வேல்முருகன் அவை விதியை மீறி நடந்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. பேரவையில் வேல்முருகன் பேசினால் நான் அவையில் அமர்ந்து கேட்பேன், நல்ல கருத்துகளை கூறுவார். வேல்முருகன் தற்போது அதிகபிரசிங்கித் தனமாக நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
வேல்முருகன் ஒருமையில் பேசியது மற்றும் அமைச்சர்களை கை நீட்டி பேசியதை ஏற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். த.வா.க. உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை; வேல்முருகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இறுதி எச்சரிக்கை மட்டுமே விடுக்கிறோம். வேல்முருகன் தனது செயலை திருத்திக் கொள்ள வேண்டும். இது போல இனிமேல் யாராவது நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.