தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வரை , சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காங்களை அமைப்பதில் உலகின் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப் மற்றும் இயக்குனர் ஆல்பர்ட் லொரன்டே
ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாட்டில் ரூ.2500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி, மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். அப்போது தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கைடன்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி விஷ்ணு ஆகியோரும் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் அதிகாரி லாரா பெர்ஜானோ தனது குழுவினருடன் தமிழக முதல்வரை சந்தித்து பேசினார்.