Skip to content
Home » சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

சீமானுக்கு எதிரான வழக்கு.. திருச்சி கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கும் எஸ்பி வருண்குமார்

  • by Authour

விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் , முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறான வகையில் பாடல் ஒன்றில் பாடியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து, தென்காசியில் இருந்த சாட்டை துரை முருகனை கைது செய்தனர். அந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன்  ஆகியோர் பேசிய ஆடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இந்த ஆடியோக்கள் வெளியானதற்கு திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார்தான் காரணம் என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியினர் எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்தனர். சமூக வளைதலங்ளில் அவரையும் அவரது குடும்பத்தார் பற்றியும் மிகவும் மோசமான படங்கள் மற்றும் விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்தது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் புகாரின்பேரில், சீமான் உள்ளிட்ட பலர் மீது, தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவுச் செய்தனர். தொடர்ச்சியாக  சிவகங்கை, மதுரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யப்பட்டனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த எஸ்பி வருண்குமார், அவரது மனைவியும், புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டே இருவரும் எக்ஸ் பக்கத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், சீமான் மீது வழக்குப் பதிவுச் செய்து நடவடிக்கை எடுக்க, திருச்சி எஸ்பி வருண்குமார், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்- 4ல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை, நீதிபதி பாலாஜி ஏற்றுக் கொண்ட நிலையில், விரைவில் வழக்கு மீதான விசாரணை துவங்க உள்ளது. இதற்காக எஸ்பி வருண்குமார், நாளை மறுநாள் (30ம் தேதி) நேரடியாக நீதிபதி முன் ஆஜராகி, தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளார். இதனைத்தொடர்ந்து சீமான் மீதான வழக்கு விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.