கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை மழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கோட்டயத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று தொடங்கிய பருவமழை படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் பெய்யும். ஜூலை மாதம் மத்தியில் நாடு முழுவதும் பரவும். தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், நிகோபார் தீவுகளில் கடந்த 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
கேரளாவில் அடுத்த 5 நாட்கள் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். கேரளாவில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட 34% குறைவாக பெய்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியைவிட அதிகமாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரம் அல்லது 10 தினங்களில் இந்த மழை கர்நாடகத்திலும் தொடங்கம். கர்நாடகத்தில் குடகு பகுதியிலும், கேரளாவில் வயநாடு பகுதியிலும் பலத்த மழை பெய்தால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகம், தமிழ்நாட்டில் குறைவாக பெய்ததால் மேட்டூர் அணைக்கு கர்நாடகம் தண்ணீர் விடவில்லை. இதனால் தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு அணை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 20 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் இன்று காலை வரை கோடை மழை 123.1 மி.மீ. பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 147.9 மி.மீ.மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் கூறியுள்ளது.