இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். அதாவது நாட்டில் பெய்யும் மழை அளவில் சுமார் 80 சதவீதம் மழை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கும். தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்குவது வழக்கம்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே மாதம் 29-ந்தேதியே தொடங்கியது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி அல்லது 7-ந்தேதி பருவ மழை பெய்ய தொடங்கும் என கூறியுள்ளது. அதற்கான அறிகுறிகளே இப்போது தென்படுவதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தெற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் முன்கூட்டியே தென்படவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், அவ்வாறு தென்பட்டால் மழை முன்கூட்டியே தொடங்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும்போது, கடந்த 2005-ம் ஆண்டு முதல் இப்போது வரை அதாவது 18 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் சரியாக இருந்தது. 2015-ம் ஆண்டு மட்டும் இதில் தவறு ஏற்பட்டது. அதன்பின்பு எந்த தவறும் ஏற்பட்டதில்லை. அதுபோல இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும். தாமதமாக தொடங்கினாலும் மழை பொழிவில் குறைவிருக்காது என்று ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.