தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சாதிய படுகொலைகள், சாதிய வன்முறைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் தியாக காமராஜ் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் குல பால்ராஜ் முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தொடரும் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், தேவேந்திர குல வேளாளர் மக்கள் தனியாக வயல்களில் வேலைக்குச் செல்ல முடியவில்லை ஆடு, மாடு மேய்க்க கூட செல்ல முடியவில்லை. இதற்கு உயிருக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதுதான் காரணம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், மாநகர செயலாளர் ராஜேஷ் கண்ணன், வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் அம்மாபேட்டை சசிகுமார், தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் அந்தோணி ராஜ், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்வம், பூதலூர் ஒன்றிய செயலாளர் சுகுமாறன், திருவையாறு ஒன்றிய செயலாளர் திலீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.