திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌந்தரபாண்டியன். இவர் இதே தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ. வாக இருப்பவர். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு அழைக்கப்படவில்லை என்பது தொடர்பான தனது ஆதங்கத்தை பேஸ்புக்கில் பதிவாக போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று அமைச்சர் நேரு லால்குடியில் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணி, புதிய கோர்ட் கட்டும் பணிகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர்
ரவிச்சந்திரன், துணைத்தலைவர் கருணா ராஜ் மோகன் மற்றும் நிர்வாகிகள் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்கம் போல் எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுக்கு அழைப்பு இல்லை. இது தொடர்பாக இன்று நாளிழ்களில் வெளியான செய்தியை தனது பேஸ்புக்கில் பதிவிட்டு அதன் கீழ் .
‘இன்று செய்தித்தாளில் செய்தியை பார்த்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் உறுதுணையாக இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்பவர்களுக்கு தூதராக இருப்பவரின் செயல் பாராட்டுதலுக்குரியது’ என குறிப்பிட்டுள்ளார்.
கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்பவர்களுக்கு தூதராக இருப்பவர் என எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் யாரை குறிப்பிடுகிறார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக எம்எல்ஏ சௌந்தரபாண்டியனிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘ எனது ஆதங்கத்தை வெளியிடுத்தி இருக்கிறேன். இது குறித்து மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என முடித்துக்கொண்டார்..