தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி ஏப்ரல் மற்றும் அக்டோர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுகளுக்கான சொத்துவரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஆனால் வரி விதிப்புதாரர்கள் பெரும்பாலும் செப்டம்பர், மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வெரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்துவரியை செலுத்தி 5 சதவீதம் அதிக பட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 30-ந்தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி விதிப்புதாரர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அதிக அளவில் சொத்துவரியை மாநகராட்சிக்கு செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.