Skip to content

ஸ்ரீரங்கம்: 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த சொர்க்கவாசல் திறப்பு விழா

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ந்தேதி மோகினி அலங்காரத்தில் காட்சி தந்தார்.

விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு  கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியான ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள்கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டார்.

16-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 19-ந் தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி, 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 6 லட்சம் பக்தர்களும் 9-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி நாள் அன்று 2.75 லட்சம் பக்தர்களும் தரிசனம் செய்துள்ளனர்.

ராப்பத்து உற்சவத்தில் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 7 லட்சம் பக்தர்களும், 16-ந் தேதி திருக்கைத்தல சேவையன்று 1 லட்சம் பேரும், 17-ந்தேதி வேடுபறியன்று 1லட்சம் பேரும் தரிசனம் செய்துள்ளனர். 19-ந் தேதி 70 ஆயிரம் பேரும் விழாவின் நிறைவு நாளான 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்தன்று 1 லட்சம் பக்தர்களும் தரிசனம் செய்துள்ளனர். விழா நாட்கள் முழுவதும் மொத்தம் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.