Skip to content
Home » பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.   மதுரைக்கு அடுத்ததாக  ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றதாகும். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து  கொண்டுள்ளனர்.

800 காளைகளும்,  500  வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.காலை 8.மணிக்கு ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு திருச்சி ஆர்டிஓ உறுதிமொழி செய்து வைத்தார். 8. 05 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது இந்த போட்டியில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது, அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது, இந்த போட்டியை திருச்சி ஆர்டிஒ அருள் தொடங்கி வைத்தார்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும்  மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ,  தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது

சீறிப்பாய்ந்த காளைகளை  வீரர்கள் போட்டி போட்டு மடக்கி  பிடித்தனர்.  பெரும்பாலான காளைகள்  பிடிபடாமல் வீரர்களை  எளிதில் தூக்கி வீசி மைதானத்தில்  நின்று ஆடியது.   ஆரம்பம் முதலே  போட்டி விறுவிறுப்பாக இருந்தது.  காளைகளின்  சாகசத்தை கண்டு திரண்டிருந்த மக்கள்  கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். முதல் சுற்றில்  ஒரு வீரர் காயமடைந்தார்.

அதிக காளைகளை   பிடிக்கும் வீரருக்கு  முதல் பரிசாக பைக்கும்,  2ம் பரிசாக  எல்இடி டிவியும் வழங்கப்படுகிறது.  போட்டிகள் மொத்தம் 8 சுற்றுகளாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக திருச்சியில் மண்டல கால்நடை இணை இயக்குனர் கணபதி மாறன் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை மருத்துவ ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை  கண்டறியும் சோதனை நடத்தினர்.  ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைப்பவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சையும் அளித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்
திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பெனவாத்தலைமையில் 510போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.