முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கி இருந்து விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்படத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது. சூரசம்காரத்தை காண திருச்செந்தூர் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரசம்காரத்தை காண வெளியூர் பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து இன்று கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பல ஊர்களில் இருந்து காவடியுடன் பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.