தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை(சனிக்கிழமை ) மாலை கலைஞர் நூற்றாண்டு மகளிர் மாநாடு, கருத்தரங்கம் நடக்கிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரியங்காவும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இன்று இரவு 7.55 மணிக்கு டில்லியில் இருந்து புறப்படும் சோனியா, பிரியங்கா இருவரும் இரவு 10.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்கள்.
அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இரவு தங்குகிறார். நாளை (சனிக்கிழமை) காலையில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, அரசியல் நிலவரங்கள் பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பகலில் ஓட்டலில் தங்கியிருப்பதால் பிரியங்கா ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜீவின் நினைவிடத்துக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்காக தனி ‘கான்வாய்’ ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நகரங்களுக்கு செல்லும்போது பிரியங்கா ஷாப்பிங் செல்வது வழக்கம். நாளை அவ்வாறு விரும்பினால் அவர் செல்வதற்கும் ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் சோனியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய விருந்து கொடுக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சி அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் அல்லது முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெறும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் ஒன்றாக சந்திக்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதுவும் அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை.
நாளை நடைபெறும் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தலைவர்களும் பேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாலை 4.35 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் மாநாடு நடைபெறும் நந்தனம் திடலுக்கு செல்கிறார்கள். மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். பின்னர் ஓட்டலுக்கு திரும்புகிறார்கள். இரவில் ஓட்டலில் தங்குகிறாார்கள். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் விமான நிலையம் செல்கிறார்கள். 6.55 மணிக்கு விஸ்தாரா விமானம் மூலம் டில்லி புறப்பட்டு செல்கிறார்கள்.
சோனியா காந்தி நாளை , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ள நிலையில் இன்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.