தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் வசித்து வரும் அப்துல் ஹமீது மகன் அப்துல் காதர் (55) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், வயதான காலத்தில் தனிமையில் வாழ்ந்துக் கொண்டு மனநல பாதிப்பிற்காளான மகனை பராமரிக்க இயலவில்லை எனக்கூறி, அப்துல் காதரின் தாயார், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் அறக்கட்டளை மூலம் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் மனு அளித்தார். இதன் பேரில் விசாரணை செய்த வட்ட சட்டப் பணிகள் குழு பாதிக்கப்பட்டவரை மனநலக் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவுச் செய்து, பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமன அப்துல் கனி தலைமையில், ராஜகிரி கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் ஹுசைன், பாபநாசம் காவல்துறையினர், அன்பாலயம் மனநலக் காப்பக பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் மனநல பாதிக்கப்பட்டவரின் இல்லத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட அப்துல் காதரை தஞ்சாவூர் அன்பாலயம் மனநல காப்பகத்தில் சேர்க்க அனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டச் சட்டப்பணிகள் குழு ராஜேஷ் குமார், தன்னார்வலர் பாலமுருகன் செய்திருந்தனர்.