நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் கோவை கே.ஜி.சாவடி கிராமத்தில் “உங்க எம்.பி, நிற்க வைத்து கேளுங்கள்” என்ற பெயரில் மகளிர்களுக்கான சிறப்பு பிரச்சார நிகழ்ச்சி நடத்தினர். இதில் அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர். குறிப்பாக இலவச வீட்டு மனை பட்டா, வீடு கட்ட மானியம், மின்சாரம் இணைப்பு, மற்றும் பல்வேறு பிரச்சனைகளை தெரிவித்தனர். அப்போது வாக்காளர்களிடம் பேசிய வசந்தராஜன் பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டுவது தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய இளம் பெண் ஒருவர் இதுவரை தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை, சாலை வீடாக இருந்த போது சுவர் வைக்க கோரியதாகவும், சுவர் வைத்த பிறகு பட்டா நகல் கேட்டு தற்போது வரை மின்சார இணைப்பு கொடுக்கவில்லை என தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார், அப்போது அங்கிருந்த பாஜக பெண் நிர்வாகியை அழைத்து தகவல் நிலையத்தில் 15 வீடுகளுக்கும் சோலார் பேனல் திட்டத்திற்கு பதிவு செய்ய உதவுமாறு தெரிவித்ததோடு உடன் இருந்து மின் இணைப்பு கிடைக்கும் வரை கண்காணிக்க அறிவுறுத்தினார். மேலும் அரசு கட்டிகொடுத்துள்ள வீடுகள் தரமான வீடுகளாக இல்லை, மக்கள் இதனை கேள்வி கேட்க வேண்டும் எனக் கூறிய அவர் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை கே.ஜி.சாவடி பகுதியில் மின்சாரம் வழங்காத 15 வீடுகளுக்கு பிரதமர் மோடி திட்டத்தில் சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதியளித்தார்.