தமிழகத்தை பொறுத்தவரை மார்கழி, தை மாதங்கள் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். மார்கழி பனி மாடியை துளைக்கும். தை பனி தரையை துளைக்கும் என கிராமங்களில் சொல்வார்கள். மார்கழி மாதம் முடியும் தருவாயில் தற்போதும் தமிழகத்தில் ஆங்காங்கே பனிப்பொழிவு காணப்படுகிறது. இன்று அதிகாலை திருச்சி
புறநகர்ப்பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது.
திருச்சி மாநகரின் அடையாளமாக கருதப்படும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும் இன்று அதிகாலையில் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி மூடியிருந்தது. இது போல பொன்மலை ரயில் நிலையம், சென்னை தேசிய நெடுஞ்சாலை, காவிரி .கொள்ளிடம் பைபாஸ் பாலம் ஆகியவை காலை 6.30 மணி அளவில் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. அதாவது மெல்லிய ஆடை போர்த்தியது போல திருச்சி நகரம் பனியால் மூடப்பட்டு இருந்தது. இடையிடையே விளக்கொளியில் நகரம் ஜொலித்தது.
இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர். வாகனங்கள் மிக அருகில் வந்தபோது தான் அந்த விளக்கு ஒளியும் தென்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். ,இதுகுறித்து அந்த வழியாக வந்த லாரி டிரைவர் மாதவனிடம் கேட்டபோது, இது பனி சீசன் தான். கடந்த வாரம் ஒருநாள் இதைவிட அதிகமாக பனிமூட்டம் இருந்தது. பிப்ரவரி 15ம் தேதி வரை இப்படித்தான் பனிமூட்டம் அவ்வப்போது இருக்கும். அதை அனுசரித்து வாகனங்களை கவனமாக ஓட்டுகிறோம். நான் டில்லி, பஞ்சாப் வரை லாரி ஓட்டிச்சென்றிருக்கிறேன். வட மாநிலங்களை விட தமிழகத்தில் பனி தாக்கம் குறைவுதான் என்றார்.