அரக்கோணம் அடுத்த சின்ன கைனூரை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சூர்யா, சந்தோஷம் ஆகியோருடன் சேர்ந்து தண்ணீர் பாம்பு ஒன்றை பிடித்தார். சுமார் 3 அடி நீளமுள்ள அந்த பாம்பை மோகன் கையில் வைத்து விளையாடினார். திடீரென அவர் பாம்பின் தலையை தனது வாயால் கடித்து துப்பினார். பின்னர் பாம்பின் உடலை சாலையில் வீசினார். பாம்பின் தலை தனியாக கிடந்தது. இந்த காட்சியை நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த வீடியோவை தங்களது பேஸ்புக் வலை தளத்தில் பதிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பாம்பை கடித்து துப்பி வீடியோ வெளியிட்டதாக மோகன் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா, சந்தோஷம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வன விலங்குகளை துன்புறுத்துதல், வனவிலங்குகளுக்கு மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.