திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி 1141 கிராம் எடை கொண்ட பசை வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ₹.94.53 லட்சம் ஆகும்.
மேலும் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் உடைமையில் 22 கேரட் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் செயின், மோதிரம், பிரேஸ்லெட் என மொத்த நகைகளின் மதிப்பு 22,41,790 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் வெளிநாட்டு பணம் மற்றும் வெளிநாட்டு சிகரெட் வகைகள், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் ஆமைகள் என தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை முற்றிலும் தடுப்பதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தினதோறும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி விமான நிலையம் கடத்தல் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி இனிவரும் காலங்களில் திருச்சி விமான நிலையங்களில் கடத்தல் பொருட்கள் இல்லாத விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.