அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவுத் திட்டம் அரியலூர் மாவட்டம் சார்பில் சிறுதானிய திருவிழா முன்னிட்டு சிறுதானிய விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) கொடியசைத்து துவக்கி வைத்து, சிறுதானிய உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.
சிறுதானியங்களின் மகத்துவத்தை உணர வேண்டும். ஒவ்வொரு மனிதனும் நோயற்ற நல்வாழ்வு வாழும் வகையில் தங்களது அன்றாட உணவுப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல் நலனுக்கு சிறுதானியங்கள் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அந்தவகையில் சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி இன்றையதினம் துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் கலந்துகொண்ட மாணாக்கர்கள் சாமை உண்டால் ஆமை வயது, திணை இதயத்திற்கு துணை, குதிரை பலம் பெற குதிரைவாலி, கம்பு உடலுக்கு தெம்பு, கேழ்வரகு
சர்க்கரையே விலகு, சோம்பல் நீக்கும் சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் நன்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர். இப்பேரணியானது அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த சிறுதானியங்கள் உணவுப்பொருள் கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி பார்வையிட்டார். மேலும், சிறுதானியங்களின் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து பள்ளிகளில் நடைபெற்ற வினாடி வினா போட்டி, சிறுதானிய சமையல் போட்டி மற்றும் கண்காட்சி போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)பிரேமா, இதர அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.