ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.
நேற்று 2ம் நாள் ஏலம் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் நிறைவு பெற்றது. ஏலத்தில் ரூ.639.15 கோடிக்கு 182 வீரர்கள் எடுக்கப்பட்டனர்.
இதில் ஐ.பி.எல். வரலாற்றிலும் சரி, இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும் சரி மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவர் இடது கை பேட்ஸ்மேன்.
இவர் இந்த வருடம் தான் பீகார் அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமானார். கடந்த ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஆடி உள்ளார். இவர் பீகாரில் சமஸ்டிபூர் அருகே உள்ள தாஜ்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இவரது தந்தை தான் சூர்யவன்ஷிக்கு பயிற்சி அளித்து உள்ளார். 9 வயதிலேயே கிரிக்கெட் ஆட தொடங்கி உள்ளார்.