தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, முகமது பந்தர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம், 64. அதே பகுதியில் மசூதியில் ஜமாத் தலைவராக உள்ளார். அவருக்கு கடந்த 3ம் தேதி கூரியர் மூலம், பெட்டி ஒன்று பார்சலாக வந்தது.
அதில், முறையான அனுப்புநர் விலாசம் இல்லை. அதனால், சந்தேகத்துடன் பார்சலை பிரிக்காமல் வைத்து இருந்தார். நேற்றுமுன்தினம் மதியம், முகமது காசிம் மகன் முகமது மஹாதீர், பார்சலை பிரித்து பார்த்த போது, அதில், மண்டை ஓடு இருந்தது. இது குறித்து திருவையாறு போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம்., ரஹ்மான் நகரை சோர்ந்த மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளரான அப்துல்லா(40),, கீழவாசல் ராவுத்தர் பாளையம் முகமது முபின்(23), ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர், வடக்கு வாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்து மூன்று மண்டை ஓடுகளை எடுத்து எலுமிச்சை ,பழம் ,குங்குமம் ,மண்டை ஓடு, பொம்மைகளை வைத்து மாந்திரீகம் செய்தது போல, கிப்ட் பேப்பர் கொண்டு
பார்சல் செய்து, தஞ்சாவூரில் இரண்டு ஜமாத் தலைவர்களுக்கும், முகமது காசிம் ஆகிய மூவருக்கும் அனுப்பியது தெரியவந்தது.
இதற்கான காரணம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, முகம்மதுகாசிம் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஐமாத்தலைவராக இருந்து வருவதாகவும், இறப்பு குறித்து முறையாக அறிவிப்பது இல்லை இறுதி சடங்கிற்கு இடம் வழங்குவதில்லை என, திருவையாறு முகமதுபந்தர் ஜமாத் தலைவரான முகமது காசிமுக்கும், தஞ்சை கீழவாசல் நாட்டு மருந்துகடை உரிமையாளர் இஸ்மாயில் , அதே பகுதியில் ஒரு நாட்டு மருந்து கடையில் வேலை பார்த்து வரும் சவுக்கத்தலி ஆகியோருக்கும் தங்கள் பிரச்சினை தொடர்பாக மூவரும் சேர்ந்து அவர்களை உளவியல்ரீதியாக துன்புறுத்த வேண்டும் என பார்சல் அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.
இதே போல, தஞ்சாவூரில் உள்ள ஒரு ஜமாத் தலைவர் காதலை பிரித்து வைத்ததால் அவரை மிரட்டுவதற்கும், மற்றொரு ஜமாத் தலைவர் திருமண விவகாரத்தில் முறையாக நடந்துக்கொள்ளாததால் அவரை மிரட்டுவதற்காகவும், ஒரே நாளில் பார்சலில் மண்டை ஓடு அனுப்பியதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில், தஞ்சாவூர், தொம்மங்குடிசை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மீதமுள்ள இரண்டு ஜமாத் தலைவர்களுக்கு நேற்று தான் பார்சல் வந்த நிலையில், போலீசார், அவர்களுக்கு போன் செய்து, பார்சலை பிரிக்க வேண்டாம் என கூறி, பார்சலை கைப்பற்றி சென்றுள்ளனர்.