சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செங்கமல நாச்சியார் புரத்தில் இயங்கி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில், இயந்திரம் மூலமாக மருந்து தடவிய தீக்குச்சி உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் திடீர் மின்கசிவு மற்றும் மூலப் பொருள்களின் உராய்வு காரணமாக தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழிற்சாலை கட்டிட உள் மற்றும் வெளி வளாகம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மென்மேலும் பரவாமல் தடுக்க, தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர். தொழிற்சாலையில் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு தயாரித்து வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டி பண்டல்கள் உள்ளிட்ட பொருட்களை தீ விபத்திலிருந்து மீட்டனர்.
இருந்த போதிலும் மருந்து மூழ்கிய தீக்குச்சி உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்ட ரூபாய் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.