இசையமைப்பாளர் இமான் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும், இனிமேல் அவருடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தைச் சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டி கொடுத்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விஷயம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை பொதுவெளியில் எங்கும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில், பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகவுள்ள அவரது ‘அயலான்’ திரைப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் இமானுக்குப் பதில் கொடுப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.