தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வுக்காக நேற்று சிவகங்கை மாவட்டம் சென்றார். நேற்று காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று மருது சகோதரர்களுக்கு ரூ.1.06 கோடியில் சிலை அமைக்க அடிக்கல் முதல்வர் நாட்டினார். பின்னர் சிவகங்கை மன்னர் கல்லூரியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 53 ஆயிரம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 33 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசின் திட்டங்களால் இந்த மாவட்டத்தில் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக 2 லட்சத்து 38 ஆயிரம் மகளிர்க்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 65 கோவில்களுக்கு குடமுழக்கு நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. பல அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே ரூ.89 கோடியில் கலெக்டர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். ரூ.50 கோடியில் திருப்பத்தூர் பைபாஸ் சாலை அமைக்கப்படும்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி, திமுக அரசு திவாலாகப்போகிறது என திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். 2021ம் ஆண்டு தேர்தலின்போது திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. அதில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டோம். இன்னும் 116 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். 34 துறைகள் உள்ளது. துறைக்கு ஒன்றிரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதையும் விரைவில் நிறைவேற்றுவோம்.
மற்ற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்ட எடப்பாடி எங்களைப்பார்த்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிறார். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் கொடுக்கப்படும் என்றார்களோ கொடுத்தார்களா?
வீட்டுக்கு ஒரு செல்போன் வழங்கப்படும், பொது இடங்களில் வைபை வசதி செய்யப்படும் என்றார்கள். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? அதையெல்லாம் மறந்து விட்டு வெட்டியாக பேசுகிறார் எடப்பாடி.
தமிழ்நாட்டை அதல பாதாளத்திற்கு தள்ளியது அதிமுக ஆட்சி. அதிமுக ஆட்சியில் பதவிகள் கேட்டு டில்லிக்கு போனார்கள். இப்போது மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்தபோதும், மாநில நிதியில் இருந்து மத்திய திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம்.
இது பற்றி எல்லாம் நம்முடைய நிதி அமைச்சர் விளக்கம் அளித்தால், எடப்பாடி காதில் வாங்குவதில்லை. வெட்டிச்செலவு செய்கிறோம் என்கிறார். மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்குகிறோமே , அதை வெட்டிச்செலவு என்கிறாரா, குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறோமே அதை வெட்டிச்செலவு என்கிறாரா, ?திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசை தான் இருக்கிறது என்று பேசுகிறார் எடப்பாடி . அமாவாசையை எண்ணிக்கொண்டே இருங்கள். பரவாயில்லை.
நாங்கள் தமிழ்நாட்டு மக்களை எண்ணிப்பார்த்து, பார்த்து திட்டங்களை நிறைவேற்றுகிறோம். அதனால் தான் தமிழகம் இன்று நம்பர் 1 மாநிலமாக இருக்கிறது. நான் நேற்று சிவகங்கை வந்தபோது திரண்டிருந்த மக்களின் முகங்களை பார்த்தேன். மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அவர்களது முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன். எனவே தொடர்ந்து தமிழகத்தை திமுக தான் ஆளும்.மக்களுடன் இருந்து, மக்களுக்காக என்றும் பணி செய்வோம், என்றும் உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.